அனுர அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசு ஒத்துழைப்பு

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்க தயார்

by Staff Writer 27-09-2024 | 8:13 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.  

இதற்கமைய கண்டி நகர நீர் முகாமைத்துவத் திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கல், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகிய திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிராம உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், களு கங்கை நீர் வழங்கல் திட்டம், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியனவும் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் ஹபரண- வெயங்கொட மின் பரிமாற்ற வலையமைப்பு மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ஆகியவற்றை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதோடு, முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் களனி கங்கை புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான கொடுப்பனவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதன்போது தெரிவித்தார்.