தேஷபந்து தொடர்பான இடைக்கால மனு நிராகரிப்பு

தேஷபந்து தென்னகோன் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றினால் நிராகரிப்பு

by Chandrasekaram Chandravadani 18-09-2024 | 6:59 PM

Colombo (News 1st) தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக செயற்படுவதை தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு இன்று(18) உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி பெல்லன்வில தம்மரத்ன தேரர், கொள்ளுப்பிட்டி ராஹுல மற்றும் கலாநிதி அகலகட சிறிசுமன தேரர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

யசந்த கோதாகொட, அச்சலர வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதை தொடர்ந்து, தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக செயற்படுவதை தடுத்து கடந்த ஜூலை 24ஆம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.