Colombo (News 1st) இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்பத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் இன்றாகும்.
இறை தூதராம் முஹம்மது நபி அவர்களின் ஜனன தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
மற்றவர்களிடையே நம்பிக்கையை வளர்த்த முஹம்மது நபியவர்கள், தம் வாழ்நாள் முழுவதும் காத்துவந்த நற்பண்புகளுக்காகவும் மனிதநேயத்திற்காகவும் செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர புரிதல், நேர்மை, நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களை வெறுத்து ஒதுக்காதிருத்தல் போன்றவை இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் அடிப்படை போதனைகளின் மையக்கருவாக அமைந்திருந்தன.
நேர்மையான மனிதர்களுக்கு இறைவன் உதவி புரிகிறார் என்பதையும் அத்தகையவர்கள் இறைவனால் பொருத்தமான, உயர்ந்த இடங்களுக்கு உயர்த்தப்படுவதையும் முஹம்மது நபி அவர்களுடைய வாழ்க்கை மற்றும் தத்துவத்தைப் பற்றி ஆராய்ந்தால் புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நபிகள் நாயகம் அவர்கள் எடுத்துக்காட்டிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து வகையான அடிப்படைவாதத்தையும் முறியடித்து சிறந்த, முன்னேறிய உலகை உருவாக்குவதற்கான உறுதியுடன் உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் கைகோர்ப்பார்கள் தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எந்தவொரு சமூகத்திலும் வாழும் மனித இனத்தின் சிந்தனை மற்றும் நடத்தையின் அடிப்படையாக அமைந்திருப்பது அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட ஆழமான மத நம்பிக்கையாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வௌியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீய பழக்கங்கள் நிறைந்திருந்த உலகை நல்லொழுக்கமுள்ளதாக மாற்றுவதற்காக அர்ப்பணித்த ஆன்மீகத் தலைவருமாகக் கருதப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், உலகெங்கும் பரப்பிய போதனைகளிலிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தலைவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், குலம் ஆகியவற்றைப் பாராது ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயற்படும் சமூகத்தை உருவாக்க அவரின் வழிகாட்டலைப் பின்பற்ற எமக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவரின் போதனையைப் பின்பற்றிய அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெறுவதற்கான நேரம் வந்துள்ளதாகவும் அதற்காக இந்த கடினமான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.