Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் இன்று(11) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாளிகாகந்த நீதவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகள் மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையின் அடிப்படையில் அவர்களை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 3 சந்தேகநபர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் கடுமையான உளநலப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், அதனை விசேட காரணமாக கருதி சந்தேகநபர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
தரமற்ற நோயெதிர்ப்பு மருந்துகளை நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் பகிர்ந்தளித்த சம்பவம் தொடர்பில் கடந்த 8 மாதங்களாக கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.