ஐக்கிய மக்கள் கூட்டணி அங்குரார்ப்பணம்

by Staff Writer 08-08-2024 | 12:52 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்த நிகழ்வு இன்று(08) முற்பகல் நடைபெற்றது. 

ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான உடன்படிக்கை இதன்போது கைச்சாத்திடப்பட்டது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியில் 8 முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 

அதற்கமைய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், சுதந்திர மக்கள் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற குழுத் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், 
சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைர் டலஸ் அழகப்பெரும, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பிரஜைகள் குரல் மக்கள் இயக்கத்தின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் E.L.B.சமீல், முற்போக்கு தமிழரசு கட்சியின் செயலாளர் விஜேசுந்தரம் ரமேஷ், திவிதென ரணவிரு அமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு ஆகியோர் கூட்டணியின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

கட்சியின் தேர்தல் நடவடிக்கை பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்கவினால் கூட்டணியின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

ஊழல் மோசடிகளை அடியோடு வேரறுப்பதற்கான பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு, ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக வலுவான சட்டம், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுதல், வலுவான சர்வதேச தொடர்புகள், 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள், எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுதல், சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட யோசனைகள் ஐக்கிய மக்கள் கூட்டணி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, லக்‌ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட பலரும் இன்றைய கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.