உத்தர் பிரதேஷில் சனநெரிசலில் 116 பேர் பரிதாப பலி

உத்தர் பிரதேஷில் சனநெரிசலில் சிக்கி 116 பேர் பரிதாப பலி ; மேலும் 18 பேர் காயம்

by Staff Writer 03-07-2024 | 10:28 AM

இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில்  ஆன்மீக சொற்பொழிவின் பின்னர் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 116 ​பேர் உயிரிழந்துள்ளனர். 

 

 

உயிரிழந்த 116 பேரில் 108 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும் மேலும் 18 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

 

துறவி ஒருவரின் மடத்தில் அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றுள்ளது.

 

 

இதில் ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்த நிலையில் கூட்டம் நிறைவடைந்து பக்தர்கள் வெளியேறியபோது சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

இதன்போது மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

விபத்து தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 200,000 இந்திய ரூபா இழப்பீடு வழங்கவும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபா வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

நிகழ்ச்சி எற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.