இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி

by Rajalingam Thrisanno 29-06-2024 | 12:25 PM

இலங்கையின் வளர்ந்துவரும் வீரரான சாருஜன் சண்முகநாதன், இங்கிலாந்து முன்னாள் சகலதுறை வீரரான அன்ரூ பிளிண்டொவ்வின் புதல்வர் ரொக்கி பிளிண்டொவ் போன்ற திறமை வாய்ந்த வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் தொடராக இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. 

இங்கிலாந்தில் நடைபெறும் இந்தக் கிரிக்கெட் தொடரின்  முதல் ஒருநாள் போட்டியை 65 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி  இந்த விஜயத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

செல்ம்ஸ்போர்டில் நேற்று(28) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டங்களைக் குவித்தது.

மஹித் பெரேரா 58 ஓட்டங்களையும், சாருஜன் சண்முகநாதன் 57 ஓட்டங்களையும், தினுரு அபேவிக்ரம 52 ஓட்டங்களையும், அணித்தலைவர் தினுர களுபஹான 49 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். 

இங்கிலாந்து மண்ணில் சாருஜன் சண்முகநாதன் பெற்றுக்கொண்ட முதல் அரைச்சதம் இதுவாகும்.

பந்துவீச்சில் நோ கோர்ன்வெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


வெற்றி இலக்கான 295 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணி 67 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், ஜோ தஹின் 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் லூ பென்கென்ஸ்டெய்ன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்களால் பெரிதாக பிரகாசிக்க முடியாமல் போக இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணி 43.3 ஓவர்களில் 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்த வெற்றிக்கு அமைவாக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை வீரரான அன்ரூ பிளிண்டொவ்வின் புதல்வரான ரொக்கி 16 வயது இளம் வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்