ஆசிரியர் - அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

by Bella Dalima 26-06-2024 | 6:55 PM

Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

கொழும்பு லோட்டஸ் மாவத்தை அருகில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு இன்னும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகயீன விடுமுறையை பதிவு செய்து ஆசிரியர் - அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (26) காலை முதல் ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

இதேவேளை, பொலிஸாரும் பாதுகாப்பு பிரிவினரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது இடையூறு விளைவித்த போதிலும் தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாட நிதி அமைச்சினை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்தனர். 

இதன்போது, 10 பிரதிநிதிகளுக்கு நிதியமைச்சின் அதிகாரி ஒருவரை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும், கலந்துரையாடுவதற்காக நிர்வாக அதிகாரியிடம் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அங்கிருந்து திரும்பினர். 

பின்னர், போராட்டக்காரர்கள் மீண்டும் நிதியமைச்சிற்கு செல்ல முயன்ற போது, ​​பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

ஆசிரியர் - அதிபர்களின் போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.