IMF உடனான இணக்கப்பாடுகளை பாதுகாக்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

by Bella Dalima 01-05-2024 | 7:45 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளை பாதுகாப்பதற்கு ஒன்றிணையுமாறு  எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே  தின நிகழ்வு ''மீண்டும் வீழ்ச்சியடையாத ​கௌரவமான நாடு" எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

மருதானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த கட்சி ஆதரவாளர்கள் மாளிகாவத்தை P.D.சிறிசேன மைதானத்தில் ஒன்றுகூடினர்.

கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வௌிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்தனர்.

இதேவேளை, ரணிலுக்கு இடமளிப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான மோட்டார் சைக்கிள் பேரணி ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் நடைபெறும் P.D.சிறிசேன மைதானத்தை  இன்று பிற்பகல்  அடைந்தது.

ஶ்ரீ லங்கா பொதுஜனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் டொக்டர் கயஷான் நவரத்னவும் கட்சி ஆதரவாளர்கள் சிலருடன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து  ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் இன்று பங்கேற்றார்.

கலாசார நிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன.
 

ஏனைய செய்திகள்