ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகள் கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், 98 வயதான உக்ரேனிய மூதாட்டி ஒருவர் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில், ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
தற்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் Donetsk-இல் உள்ள Ocheretyne பகுதியில் இருந்து உக்ரைனின் Kyiv நகர் நோக்கி 10 கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து சென்றுள்ளார்.
அவரை உக்ரைன் இராணுவத்தினர் மீட்டு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Lidia Stepanivna எனும் குறித்த பெண் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும் பல முறை கீழே வீழ்ந்து எழும்பியதாகவும் தரையில் படுத்துத் தூங்கியதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தான் தன்னம்பிக்கையுடன் நடந்ததாக அவர் கூறியுள்ளமை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
"நான் அந்தப் போரில் (இரண்டாம் உலகப் போரில்) தப்பித்தேன், இந்தப் போரிலும் தப்பிப்பிழைக்கிறேன்" என்று அப்பெண் கூறியுள்ளார்.
எனினும், தற்போது ரஷ்யா தனது நாட்டிற்கு எதிராக நடத்தும் போர் இரண்டாம் உலகப் போரைப் போன்றது அல்ல என்றும்,
"வீடுகள் எரிகின்றன, மரங்கள் வேரோடு பிடுங்கப்படுகின்றன," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Lidia Stepanivna-வை மாலை வேளையில் உக்ரைன் இராணுவத்தினர் கண்டதாகவும் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்து, பின்னர் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் உக்ரைனின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.