Colombo (News 1st) நாட்டில் கடன் ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக பாரிஸ் கிளப் (Paris Club) மீண்டும் தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் Paris Club-இன் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பல்தரப்பு செயற்பாடுகள் சார்ந்த வர்த்தக மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் திணைக்களத்தின் உதவி செயலாளராகவும் வில்லியம் ரூஸ் கடமையாற்றுகின்றார்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடனும், ஏனைய தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
வாஷிங்டன் நகரில் இடம்பெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டு கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, OPEC நிதியத்தின் தலைவர் அப்துல் ஹமீட் அல் கலீஃபாவையும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சந்தித்துள்ளார்.
இலங்கையின் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை செயற்றிட்டங்களுக்காக நிதி வசதிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, அப்துல் ஹமீட் அல் கலீஃபா இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவரமைப்பின் பிரதி நிர்வாகி அஞ்சலி கௌர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.