Colombo (News 1st) மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை பதிலெடுத்தாடிக் கடந்து வெற்றியீட்டிய அணி என்ற சிறப்புடன் இலங்கை மகளிர் அணி நேற்று (17) வரலாற்று சாதனை படைத்தது.
12 வருடங்கள் பழமையான சாதனையை புதுப்பித்த இலங்கை வீராங்கனைகள், தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
தென்னாபிரிக்காவின் Potchefstroom மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்களை பெற்றது.
அணித்தலைவி Laura Wolvaardt ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றார்.
302 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு சமரி அத்தபத்து மற்றும் விஸ்மி குணரத்ன ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
முதல் விக்கெட்டில் 90 ஓட்டங்கள் பகிரப்பட்டதுடன், விஸ்மி குணரத்ன 26 ஓட்டங்களை பெற்றார்.
126 ஓட்டங்களை பெறுவதற்குள் இலங்கை அணி அடுத்தடுத்து மேலும் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
எனினும், அணித்தலைவி சமரி அத்தபத்து ஒரு நாள் அரங்கில் ஒன்பதாவது சதத்தை விளாசி 195 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
மகளிர் ஒரு நாள் போட்டியொன்றில் சமரி அத்தபத்து பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.
மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது வீராங்கனை என்ற சிறப்பையும் சமரி அத்தபத்து இதன்போது பெற்றார்.
சகலதுறை வீராங்கனையான நிலக்ஷி டி சில்வா 50 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை பதிலெடுத்தாடிக் கடந்து வெற்றியீட்டிய அணி என்ற சிறப்புடன் இலங்கை மகளிர் அணி வரலாற்றில் இணைந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து மகளிர் அணியை தோற்கடித்து மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை பதிலெடுத்தாடிக் கடந்து வெற்றியீட்டிய அணி என்ற சிறப்பை அவுஸ்திரேலிய மகளிர் அணி இதற்கு முன்னர் பெற்றிருந்தது.
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் இந்த உலக சாதனையை இலங்கை மகளிர் அணி முறியடித்திருந்தமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் திறமையை வௌிப்படுத்திய இலங்கை மகளிர் அணிக்கும், அணித்தலைவி சமரி அத்தபத்துவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசியூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.