Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் தெரிவு செய்ய கட்சியின் விசேட சம்மேளனத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் சம்மேளன கூட்டம் இன்று (15) மாலை இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சம்மேளன கூட்டம் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, கட்சியின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் தெரிவு செய்ய சம்மேளனக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டம் என்ற போர்வையில் இடம்பெற்ற துன்புறுத்தல்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இன்றைய விசேட சம்மௌனக் கூட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தமைக்கான பொறுப்பை ராஜபக்ஸக்கள் ஏற்க வேண்டுமென முன்னிலை சோசலிச கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ராஜபக்ஸ குடும்பத்தினர், நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்கும் நோக்குடன் இன்று மேடையேறியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாதவொரு நிலைமையை பெற்றோர் எதிர்நோக்கியுள்ளமைக்கு ராஜபக்ஸவினரே காரணமெனவும் முன்னிலை சோசலிலக் கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நாட்டு மக்கள் இது தொடர்பில் சிந்தித்து மீண்டும் ஏமாறாத வகையில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.