2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

by Bella Dalima 13-12-2023 | 7:11 PM

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன்  41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த நிலையில்,  மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்றது. 

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று வரை இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா ,ரோஹன பண்டார ஆகியோருக்கும் இன்று வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 அமைச்சுப்பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களான A.H.M.பௌஸி, வடிவேல் சுரேஷ் ,அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வாக்களிக்க பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை.