தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவு தினம்; வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அஞ்சலி

by Bella Dalima 26-09-2023 | 7:07 PM

Colombo (News 1st) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் திலீபனின் நிழற்படத்தைத் தாங்கிய ஊர்தி பவனியுடன் அதிகளவிலானவர்கள் யாழ். நல்லூரை வந்தடைந்தனர்.

இதனையடுத்து, தியாகி திலீபன் உயிர்த்தியாகம் செய்த காலை 10.48 மணிக்கு   ஈகைச்சுடர் ஏற்றி  அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பொது நினைவிடத்திலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம் குறித்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனுக்கு பருத்தித்துறையிலுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ். வேலணை  வங்களாவடி சந்தியிலுள்ள நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன

இதனிடையே, முல்லைத்தீவு முள்ளியவளையிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாகவும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் திலீபனுக்கு அஞ்சலி   செலுத்தப்பட்டது. 

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரிலும் திருகோணமலை தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் குளக்கோட்டம் ஒன்றுகூடல் மண்டபத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வின் போது, துறைமுக பொலிஸார் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடையுத்தரவை சிங்கள மொழியில் வாசித்தனர். நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தடையுத்தரவை தமிழ் மொழியில் பெற்றுத்தருமாறு ​கோரிக்கை விடுத்ததுடன், தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இதனையடுத்து, பொலிஸாரால் எந்த அடிப்படையில் தடையுத்தரவு பெறப்பட்டது என்பதை ஆராய்வதற்காக திருகோணமலை தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் திருகோணமலை நீதிமன்றத்தை நாடினர்.
 
இதனிடையே, தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.  மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.நல்லூரில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தியாக தீபம் திலீபன் உயிர்நீத்தார்.