E கட்டணப் பட்டியல் முறைமையில் நீர் கட்டணம்

நீர் கட்டணங்களை இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமையினூடாக விநியோகிக்க நடவடிக்கை

by Staff Writer 25-09-2023 | 5:49 PM

Colombo (News 1st) நீர் கட்டணங்களை இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமையின் கீழ் விநியோகிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட 04 இடங்களில் இந்த புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

344,697 நீர் வழங்கல் இணைப்புகளில் 326,124 இணைப்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் இலத்திரனியல் கட்டணப் பட்டியல்களுக்காக இதுவரை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த நடைமுறையை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் அமுல்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.