Colombo (News 1st) இந்தியாவில் இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் முகநூல் (Facebook) போன்ற செயலிகளில் ப்ளூ டிக் (Blue Tick) எனப்படும் நீல நிற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மாதம் 699 இந்திய ரூபா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Meta நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கணக்குகள் என்பதை குறிப்பிடும் விதமாக இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் அதிகமானோரால் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை Meta நிறுவனத்தை சேர்ந்தவை.
ட்விட்டரில் ப்ளூ டிக் அம்சத்தை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அது பயனரின் விருப்பத்தின் அடிப்படையில் என்ற வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம், முகநூல் செயலியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ப்ளூ டிக் பெற மாதக் கட்டணத்தை Meta நிர்ணயித்துள்ளதுடன், இந்தியாவில் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
இது அப்பிள் மற்றும் ஆன்ட்ராய்ட் என இரு வகைகளுக்கும் பொருந்தும் எனவும் Meta தெரிவித்துள்ளது.