உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் சம்பளம்

நஷ்டமடைந்த போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம்

by Staff Writer 15-06-2022 | 8:34 AM
Colombo (News 1st) 2021ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 45,674 மில்லியன் ரூபா என பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழுவின் புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்த போதிலும், உயர்மட்ட முகாமைத்துவ அதிகாரி ஒருவருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கொடுப்பனவிற்கான நிதி, அமைச்சரவைப் பத்திரங்கள் மற்றும் பொது நிதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டில் திறைசேரி ஊடாக கூடுதல் மூலதனத்தை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், குறித்த நிறுவனம் உரிய வகையில் நிதி முகாமைத்துவம் செய்திருப்பின் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது என பாராளுமன்றத்தின் முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு தேசிய விமான நிறுவனம், நடைமுறைக்கு மாறான திட்டங்களில் பொது வரியில் தொடர்ந்து செயற்பட வேண்டுமா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.