by Bella Dalima 16-02-2022 | 5:43 PM
Colombo (News 1st) உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இரண்டு வங்கிகளின் இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த சைபர் குழுவினால் உக்ரைன் அரசின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் மற்றும் கணினி கட்டமைப்பை ஊடுருவுவதன் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக இணையத்தளத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே, கிரிமியாவிலிருந்து யுத்த தாங்கிகளும் இராணுவ கனரக வாகனங்களும் வௌியேறும் காணொளிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ளது.
இராணுவ ஒத்திகைகளின் பின்னர், ரயில்வே பாலமொன்றினைக் கடந்து குறித்த வாகனங்கள் வெளியேறும் காட்சிகள் அந்த காணொளிகளில் அடங்கியுள்ளன.
அத்துடன், சில துருப்புக்கள் அவற்றின் நிரந்தர தளங்களுக்குத் திரும்பியுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
உக்ரைன் எல்லை அருகில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படைகளில் ஒரு பகுதியை மீளப்பெற்றுள்ளதாக ரஷ்யா நேற்று (15) அறிவித்தது.
ரஷ்யாவின் இந்த திடீர் நகர்வு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், உக்ரைன் எல்லைக்கருகில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. ரஷ்ய எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷ்யா கருதுகிறது.
உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 இலட்சம் படையினரை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷ்யாவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.