by Staff Writer 27-12-2021 | 2:19 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (27) இடம்பெறவுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் ஜனாஸா நேற்றிரவு (26) ஒலுவில் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
53 வயதான கலந்தர் லெப்பை அப்துல் காதர் என்ற சார்ஜன்டின் ஜனாஸாவே நேற்றிரவு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏனைய 03 பொலிஸ் சார்ஜன்ட்களின் சடலங்களும் இன்று (27) அடக்கம் செய்யப்படவுள்ளன.
அம்பாறை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், நேற்று (26) மாலை சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி இரவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்ததுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர்.
சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.