விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை

முல்லைத்தீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை: நோயாளர்கள் அசெளகரியம்

by Bella Dalima 02-10-2021 | 7:14 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையால் நோயாளர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவேண்டிய வைத்தியர்களின் எண்ணிக்கை 70 ஆக காணப்படுகின்ற போதிலும், தற்போது 35 வைத்தியர்களே பணியாற்றுவதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு கிளை தெரிவித்துள்ளது. பொது மருத்துவம், சத்திரசிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்ணியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய ஒவ்வொரு விசேட துறையிலும் தலா இரண்டு வெற்றிடங்கள் நிலவுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக சேவையிலிருந்த ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் ஒரு மாதத்திற்கு முன்பாக மேலதிக கற்கைநெறிக்காக வெளிநாடு சென்ற நிலையில், அதற்கான பிரதியீடு செய்யப்படவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களாக கதிரியக்க வைத்திய நிபுணர் வெற்றிடம் நிலவுவதாகவும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர், மனநல மருத்துவ நிபுணர் ஆகியோரும் நியமிக்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பின் முல்லைத்தீவு கிளை அறிவித்துள்ளது. நோயாளர்களை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றும்போது ஏற்படும் தாமதம் அவர்களின் உயிரினை ஆபத்தில் தள்ளுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சரவை சுற்றறிக்கையில் COVID-19 காலத்திற்கான மேலதிக கொடுப்பனவு அங்கீகரிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கான கொடுப்பனவு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாத்திரம் வழங்கப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.