புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம்

தவறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம்

by Staff Writer 20-04-2021 | 3:35 PM
Colombo (News 1st) இணையத்தளங்களூடாக பகிரப்படும் பொய்யான, மக்களை திசைதிருப்பும் வகையிலான வதந்திகள் குறித்து தேவையான நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இணையத்தளங்களூடாக முன்னெடுக்கப்படும் பொய் பிரசாரங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து சமூகத்தை பாதுகாக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதனூடாக சரியான தகவல்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு, சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க நீதி அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இணையத்தளங்களூடாக பொய்யான தகவல்களை பரப்புதல், மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துதல் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தல், வெறுப்புணர்வை பரப்புதல், ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துதல் என்பன இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்