by Staff Writer 16-02-2021 | 6:37 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்று (16) கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்திய அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள Astrazeneca Covishield கொரோனா தடுப்பூசியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, திஸ்ஸ அத்தநாயக்க , திலிப் வெதஆராய்ச்சி , பழனி திகாம்பரம் உள்ளிட்டவர்கள் இன்று தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.
நான்கு நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, பாராளுமன்ற ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுமென இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சிறைச்சாலை அதிகாரிகள் 5100 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாநகர எல்லைக்குள் அபாய வலயங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் உகந்தது அல்லவென சிலர் தெரிவித்துள்ளனர்.
ஹரின் பெர்னாண்டோ, முஜிபுர் ரஹ்மான், ஹேஷா விதானகே, மனுஷ நாணயக்கார, மஹிந்தானந்த அளுத்கமமே உள்ளிட்டவர்கள் தற்போது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளனர்.