by Staff Writer 15-12-2020 | 7:37 AM
Colombo (News 1st) சிறைச்சாலை கைதிகள் தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்று (15) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் முதலாவது செயற்றிட்டம், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து ஆரம்பமாவதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளின் உறவினர்கள் வௌிநாடுகளில் இருந்தால் கூட, அவர்களுடன் Skype தொழில்நுட்பத்தினூடாக உரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைதிகள், தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு தெரியப்படுத்தி தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சுமார் 5000 இற்கும் மேற்பட்ட கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 1000 கைதிகளை விடுவிக்க எதிர்பார்த்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்தநிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 2700 அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் 122 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனூடாக, சிறைச்சாலைகளில் கொவிட் தொற்று கூடியவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை புலப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய சிறைச்சாலைகளிலும் அன்டிஜன் மற்றும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.