by Staff Writer 04-06-2019 | 7:56 AM
Colombo (News 1st) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'Batticaloa Campus' தொடர்பில் விரைவில் தகவல்களை வழங்குமாறு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளது.
சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், அந்த நிறுவனம் தொடர்பிலான வேறு தகவல்கள் என்பன கோரப்பட்டுள்ளதாக ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னெடுக்கும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கென இந்த தகவல்களை முன்வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜராகியிருந்தார்.
பாடப்புத்தகங்களை பிரசுரிக்கும்போது இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சிகளைப் பதிவு செய்யும் நோக்கில் அவர் ஆஜராகியிருந்தார்.
பாடப்புத்தகங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தகவல்களை பிரசுரித்தமை தொடர்பாக கல்வி வௌியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்கவிடம் இது தொடர்பில் நீண்ட விளக்கம் கோரப்பட்டிருந்தது.
அரச வௌியீடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களில் தமது புகைப்படத்துடன் கையொப்பமிட்ட ஒரேயொரு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் என இதன்போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சில அமைச்சர்கள் பாடவிதானப் புத்தகங்களில் தமது பெயரை பயன்படுத்தாத சந்தர்ப்பங்களும் இருந்ததாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது கல்வி வௌியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு எடுத்துக்காட்டினர்.
கடந்த தினமொன்றில் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட 29 மில்லியன் பாடப் புத்தகங்களில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் நிழற்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையானது அரச நிதி மோசடியாகும் என இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு செலவான நிதி தொடர்பில் சாட்சியாளர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தபோது பாடப்புத்தக பிரசுரிப்பிற்கான விலைமனுக் கோரலிற்கான முறைமையிலிருந்த சிக்கல்களே இதற்கான காரணமென ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்கள் ஏற்கனவே கோரிய தொகையை விட, அமைச்சரின் நிழற்படத்தை பிரசுரித்ததால் அதிக தொகையை கோரியதாகவும் கல்வி வௌியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் வௌியான தகவல்களுக்கமைய, இதற்கான பிரதான காரணமாக வர்ணமயமான பக்கங்கள் தொடர்பில் முறையான புரிந்துணர்வின்மையே காரணம் எனவும் அது தொடர்பில் ஒரேவிதமான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டமையே காரணம் எனவும் தெரியவந்துள்ளது.