பொதுமக்கள் வழமை நிலைக்குத் திரும்பும் சூழல்

பொதுமக்கள் வழமை நிலைக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளதாக கடற்படைத்தளபதி தெரிவிப்பு

by Staff Writer 07-05-2019 | 7:38 AM
Colombo (News 1st) பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையுடன் பொதுமக்கள் தற்போது வழமை நிலைக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளதாக, கடற்படைத்தளபதி வைஸ் எட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். நியூஸ்பெஸ்ட்டுடனான விசேட கலந்துரையாடலில் கடற்படைத்தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க கடற்படை தயாராகவுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு ஒழிக்கப்பட்டுள்ளது. தேசிய சமுத்திர வலயத்துக்குள் பல்வேறு வழிகளில் நாட்டுக்குள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரிவினர் உள்ளனர். இதற்கமைய முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றோம். அத்துடன் சமுத்திர பரப்பில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாமும் வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது அமைதி நிலவுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்பெற்றுள்ளது என்பதையும் என்னால் உறுதியாக கூறமுடியும். இந்நிலையில் வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதேவேளை, இன, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மீதான நம்பிக்கையுடன் பொதுமக்கள் வழமை நிலைக்கு திரும்ப முடியும். கடற்படையின் 1700க்கும் அதிகமான மேலதிக படையினர் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மேல், வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, காலி, ஹம்பாந்தோட்டையிலும் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக,
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.